ஐஸ் கட்டி விலை உயர்வுக்கு கண்டனம்: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: ஐஸ் கட்டி விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று (ஆக.19) கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு 265 விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் காலையில் கடலுக்கு சென்றுவிட்டு இரவில் கரை திரும்பும். இந்த படகுகளில் மீன்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காக ஐஸ் பார்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு விசைப்படகிலும் 30 முதல் 35 ஐஸ் பார்கள் பயன்படுத்தப்படும். இந்த ஐஸ் பார்களை ஐஸ் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மீனவர்கள் வாங்குகின்றனர்.

ஒரு ஐஸ் பார் விலை ரூ.140 என இருந்ததை தற்போது திடீரென ரூ.10 விலை உயர்த்தி ரூ.150 என உயர்த்தியுள்ளனர். ஐஸ் பார் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 265 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், "கடந்த ஆண்டு ஐஸ் பார் ஒன்றுக்கு ரூ.140 கொடுத்து வந்தோம். தற்போது கூடுதலாக ஐஸ் பார் ஒன்றுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.150-ஆக விலை நிர்ணயம் செய்துள்ளனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை விசைப்படகுகளுக்கு நாள் ஒன்றுக்கு தினமும் 30 முதல் 35 ஐஸ் பார் வரை வாங்குகிறோம்.

ஒரு படகுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஐஸ் பார் வாங்க செலவு செய்ய வேண்டியுள்ளது. தினமும் சராசரியாக 200 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. இதனால் நாளொன்றுக்கு சராசரியாக 7000 ஐஸ் பார்கள் விசைப் படகுகளுக்கு வாங்கப்படுகிறது. இந்த விலை உயர்வு எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. அதனால் கடலுக்கு செல்லவில்லை" என்று மீனவர்கள் கூறினர்.

ஐஸ் உற்பத்தியாளர்கள்: இது குறித்து ஐஸ் உற்பத்தியாளர்கள் கூறுகையில், "மின் கட்டணம் உயர்வு காரணமாகவே ஐஸ் பார் விலையை ரூ.10 அதிகரித்துள்ளோம். மின் கட்டண உயர்வு எங்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள காரணத்தினால், வேறு வழியில்லாமல் விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஐஸ் பிளான்டில் இருந்து ஐஸ் பார்களை லாரிகள் மூலம் மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு சென்று, விசைப்படகுகளுக்கு ஏற்ற வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து செலவு, ஐஸ் பார் ஏற்றி இறக்கும் கூலி உள்ளிட்ட செலவுகளும் அதிகரித்திருப்பதால் வேறு வழி இல்லாமல் விலையை உயர்த்தி உள்ளோம்" என்று உற்பத்தியாளர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE