பயோமெட்ரிக் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்குகிறது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி ஆகிய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தாயகம் கவி ஆகியோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் இன்பதுரை கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் திமுக சார்பில் வாக்குச்சாவடி மையங்களில் இ-டாய்லெட் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுக சார்பில், இடிக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்தவர்களுக்கு வாக்குரிமையை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாஜக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
ஆம் ஆத்மி சார்பில், கைரேகை வைத்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அப்போதுதான் கள்ள வாக்கு செலுத்துவது குறையும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதேபோன்று கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!