புதுச்சேரி கடற்கரையில் ஓட்டகம் மிதித்து பராமரிப்பாளர் உயிரிழப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியிலுள்ள புதுக்குப்பம் கடற்கரையில் ஒட்டகம் மிதித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பராமரிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வாணியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 67). இவர் புதுவை தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரையில் உள்ள தனியார் விடுதியில் ஒட்டகம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அவர் ஒட்டகத்துக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது அவரை எதிர்பாராதவிதமாக ஒட்டகம் மிதித்து கடித்துள்ளது.

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள ரமேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பிறகே ரமேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் பராமரிப்பளார் ரமேஷ் ஒட்டகத்துக்கு தீவனம் வைத்த போது ஒட்டகம் உதைத்து, மிதித்து பின்னர் கடித்தது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

தொடரும் சம்பவங்கள்: புதுச்சேரியில் பல கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா ஏற்பாடுகளை தனியார் மூலம் அரசு செய்துள்ளது. அங்கு ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வளர்த்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஓட்டகத்தில் வலம் வருதல் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. அண்மையில் பாண்டி மெரினாவில் ஒட்டகம் ஒன்று உயிரிழந்து அதை கடற்கரையில் புதைத்துள்ளனர். சர்ச்சை வெடித்ததை அடுத்து அதை தோண்டி எடுத்து விசாரணை நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE