கும்பகோணம்: கும்பகோணம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் வசித்தவர் சுவாமிநாதன் மகன் முருகேசன்( 62). ஆட்டோ ஓட்டுநரான இவர், தினமும் ஆட்டோ சவாரி முடிந்த பின்பு மாலையில் காவிரி ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். வழக்கம் போல நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சகாஜி தெரு காவேரி ஆற்றின் படித்துறையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வழக்கமான நேரத்தைக் கடந்து நீண்ட நேரமாகியும் முருகேசன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி ஆற்றுப் பகுதிக்கு சென்றுத் தேடியுள்ளனர். அப்போது படித்துறையில் ஆட்டோ மட்டும் இருந்துள்ளது. இதையடுத்து முருகேசன் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் முருகேசன் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டாரா என்று ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது, பாலக்கரை அருகே முருகேசனின் சடலத்தை அவர்கள் மீட்டுள்ளனர். இதையடுத்து முருகேசனின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸார், இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
» தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம்!
» கேளிக்கை விடுதியில் நடனமாடியபோது கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு