தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம்!

By KU BUREAU

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே அவர் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவரை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1991 ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சென்னையை சேர்ந்த இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். 2001-04 வரை கோவை ஆட்சியராக பணியாற்றியிருந்தார் முருகானந்தம்.

2021-ல் திமுக அரசு அமைந்த பிறகு இரண்டு ஆண்டுகள் நிதித் துறை செயலாளராக இருந்தவர். முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தொழில்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார். அதே போல போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளிலும் செயலராக பொறுப்பு வகித்துள்ளார்.

முன்னதாக நேற்று தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக, தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த மாற்றதைத் தொடர்ந்து இன்று முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம். தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE