செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகிலேயே பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
பாதுகாப்பான நகரங்கள் குறித்து இணைய வழி ஆய்வினை மேற்கொண்டதாக தெரிகிறது. பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127வது இடத்தையும் பெற்றுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை தொடர்பாகவும், இதர காரணங்களின் அடிப்படையிலும் மேற்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதர மெட்ரோ நகரங்களான மும்பை (161), கொல்கத்தா (174) மற்றும் டெல்லி (263) ஆகியவை சென்னைக்கு அடுத்து இடம்பெற்றுள்ளன.
மேலும், இவ்வாண்டின் தொடக்கத்தில் “அவ்தார்” என்ற நிறுவனம் வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களின் பங்கேற்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், பத்து லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை மாநகரம் பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான நகரம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.