கன்டெய்னர் லாரியிலிருந்து கால்நடைகள் மீட்பு: சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என போலீஸார் விசாரணை

By KU BUREAU

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே சுங்கச்சாவடியில் கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 57 கால்நடைகளை மீட்ட போலீஸார், சட்டவிரோதமாக அவை கடத்திச் செல்லப்படுகின்றனவா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு போலீஸார் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவள்ளூரில் உள்ள எல்லாம் வல்லவிலங்குகள் பராமரிப்பு அறக்கட்டளையின் தலைவர் சாய் விக்னேஷ்என்பவர், சென்னை-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் பெரிய கன்டெய்னர் லாரியில் கால்நடைகள் கடத்திச்செல்லப்படுவதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, சுங்கச்சாவடி அருகே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியைமடக்கிய போலீஸார், லாரியில்சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் பசுக்கள், எருதுகள் மற்றும் எருமைகள் என 57 கால்நடைகள் இருப்பது தெரிந்தது.

லாரியின் ஓட்டுநர் கார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து, பொள்ளாச்சிக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுவது தெரிந்தது. மேலும், கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக ஓட்டுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்து லாரியைபோலீஸார் பறிமுதல் செய்து, கால்நடைகள் கடத்தி செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகளைப் பராமரிக்க போதிய இடவசதி இல்லாததால், அவை திருவள்ளூரில் உள்ள மேற்கண்ட விலங்குகள் பராமரிப்பு அறக்கட்டளைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE