கடலோர காவல் படையின் இயக்குநர் ஜெனரல் மாரடைப்பால் மரணம்: ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

By KU BUREAU

சென்னை: கடலோர காவல் படை இயக்குநர் ஜெனரல் ராகேஷ்பால் நேற்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அவர் கவனித்து கொண்டிருந்தார்.

அப்போது, பிற்பகல் 3 மணி அளவில் ராகேஷ்பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் இரவு 7.10 மணிக்கு உயிரிழந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, ராகேஷ்பால் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் கேட்ட போது, “அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது, அவருக்கு பல்ஸ் குறைந்துவிட்டது. ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் மரணமடைந்துவிட்டார்” என்றார்.

மறைந்த ராகேஷ்பால்,இந்திய கடலோர காவல் படையின்25-வது இயக்குநர் ஜெனரல் ஆவார். இந்திய கடலோர அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், இந்திய கடலோர காவல் படையில் 1989-ம் ஆண்டு ஜனவரியில் சேர்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE