கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை மட்டுமல்லாமல், வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கொடைக்கானலில் தற்போது ‘ஆஃப் சீசன்’ தொடக்கமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதிகளில் வளர்ந்துள்ள மரங்களில் இலைகள் துளிர்த்து, பசுமையாகக் காட்சியளிக்கிறது. புல்வெளிகளும் பசுமையாக காட்சியளித்து, சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன. கொடைக்கானல் மலையில் பகலில் வெயிலே தெரியாதவாறு அடிக்கடி மேகக்கூட்டங்கள் சூழ்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.
இயற்கை எழிலை ரசிக்கவார விடுமுறை நாட்களில் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். நட்சத்திர ஏரியில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல் பகுதியில் நேற்று அதிகபட்சமாக பகலில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. மாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. குறைந்தபட்சமாக இரவில் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.