மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உறுதியான தலைமையின் கீழ் லட்சியத்துடன் செல்லும் தமிழகம்: ராகுல் காந்தி புகழாரம்

By KU BUREAU

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உறுதியான தலைமையின் கீழ், தமிழகம் ஒரு திடமான லட்சியப் பாதையில் சென்றுள்ளது என்று நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டதை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

மு.கருணாநிதியின் நூற்றாண்டில், தமிழக மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வியத்தகு வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் சமூகரீதியான முற்போக்கு பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது.

அவரது உறுதியான தலைமையின் கீழ், தமிழகம் ஒரு திடமான லட்சியப் பாதையில் சென்றுள்ளது. அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்துக்கான அர்ப்பணிப்பும் தமிழகம் பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. பல மாநிலங்கள் பெரிய கனவுகள் காண ஊக்கமளித்துள்ளது.

இந்நிகழ்வில், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கருணாநிதியின் நினைவு நாணய வெளியீட்டு விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி. கருணாநிதியின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE