திருச்சி: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போது நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் - சாட்டை துரைமுருகன் பேசிய ஆடியோ வெளியானது.
அதில், அக்கட்சியின் நிர்வாகி காளியம்மாளை சீமான் விமர்சித்து பேசியது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், எஸ்பி வருண்குமார் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து பேசினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்பி வருண்குமார், சீமானின் பேச்சை ‘டேக்’ செய்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘இதுபோன்ற கொச்சையான பொய்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றம் மூலம் சந்திப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
எஸ்பியின் பதிவுக்கு நாதகவினர் பலரும் கடுமையாக விமர்சித்தும், கொச்சையாகவும், ஆபாசமாகவும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். மேலும், எஸ்பி வருண்குமார், அவரது தாயார், எஸ்பியின் மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியுமான வந்திதா பாண்டே ஆகியோரையும் விமர்சித்து ஏராளமான பதிவுகள் வந்தன.
இந்நிலையில், திருச்சி தில்லைநகர் போலீஸில் நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆக.12-ம் தேதி எஸ்பி வருண்குமார் புகார் அளித்தார். அதில், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவதூறு கருத்துக்கள் பதிவிடத் தூண்டிய சீமான் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தில்லைநகர் ஆய்வாளர் ரத்தினவள்ளி சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாதக ஒன்றிய செயலாளர் கண்ணன் (48), கட்சி உறுப்பினர் திருப்பதி (35) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில், ‘திருச்சி எஸ்பி வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று சீமான் தெரிவித்திருந்தார். இதையடுத்து, வாரப்பத்திரிக்கை ஒன்று நடத்தும் யூடியூப் சேனலில் வெளியான செய்தியை டேக் செய்து தனது எக்ஸ் தள பக்கத்தில் திருச்சி எஸ்பி வருண்குமார், ‘இதை தூண்டி விட்ட நபர்களை நீதித்துறை முன் நிறுத்துவேன். வெளிநாடுகளிலிருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல் 100 சதவீதம் எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்துக்கும், அவதூறுக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவதூறு கருத்துகள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதுவரை அவதூறு கருத்துக்களை பதிவிட்ட 30-க்கும் மேற்பட்ட ஐடிக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது அடுத்த சில நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சீமான் உள்ளிட்ட நாதக நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் தான் இதுபோன்ற அவதூறு பதிவுகள் வருவதாக எஸ்பி புகாரில் தெரிவித்துள்ளதால், விரைவில் சட்டரீதியாக சீமானை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே கரூர் காங்கிரஸ் எஸ்பி ஜோதிமணி, எஸ்பி வருண்குமாரின் எக்ஸ் பதிவுக்கு பதில் போஸ்ட் செய்து, “புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே அவர்களது குடும்பத்தினர் தொடர்பாக ஆபாசமான, அருவெறுக்கத்தக்க கருத்துகளை நாகரீகமான இந்த சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்க முடியாத கமெண்ட்டுகளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். (பொதுவெளியில் பதிவிட முடியாத அளவுக்கு ஆபாசமானவை). இதை எப்படி சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்? எஸ்பி வருண்குமாரை இழிவுப்படுத்துவதாக எண்ணி அவரது குடும்பப் பெண்கள், குழந்தைகள் மீது ஆபாச தாக்குதலை, அச்சுறுத்தலை கட்டவிழ்த்து விடுவதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது.
காவல் துறை அதிகாரிக்கும், அவர் குடும்பத்துக்குமே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன? காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தை சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்து போய்விட முடியாது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சக பெண்ணாக, எம்பியாக எனது தொகுதியின் காவல்துறை எஸ்பி வந்திதா பாண்டேவுக்கு எனது அன்பையும், உறுதியான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.