‘நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியை விட குறைவாக பெய்யும்’ - வேளாண் பல்கலை.

By KU BUREAU

கோவை: தமிழகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவ மழைக் காலத்துக்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்ப நிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2024-ம் ஆண்டுக்கான தென் மேற்குப் பருவ மழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட38 மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் மழை அளவு சராசரி அளவை விட குறைவாகவே பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE