`உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அண்ணாமலையே காரணம்'- வீரலட்சுமி பகீர்

By காமதேனு

தனக்கும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், தனது அமைப்பைச் சார்ந்தவர்களின் உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே முழு காரணம் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை- பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு வருவதாகவும், பா.ஜ.க மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் எம்.ஜி.பாஸ்கர் உள்ளிட்டோர் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும் வருமான வரித்துறையினரிடம் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வருகிற 26ம் தேதி மீண்டும் புகார் அளிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வாயிலாக அவர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் வீரலட்சுமி, தனது உயிருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் ஆபத்து இருப்பதாக புகார் அளித்துள்ளார்.

அண்ணாமலை

அவரது புகாரில், தேசிய நெடுஞ்சாலைத்துறை முறைகேடு தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் நேற்றும், நேற்று முன்தினம் இரவும், மர்ம நபர்கள் இருவர் தன்னை குறித்து விசாரித்துவிட்டு வீடு மீது மதுபாட்டில்கள் வீசியதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தூண்டுதல் பெயரில் பா.ஜ.க மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் மற்றும் எம்.ஜி.பாஸ்கர் தான் இதற்கு பின்னணியில் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கும் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், தன் அமைப்பை சேர்ந்தவர்களின் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அண்ணாமலை தான் பொறுப்பு எனவும் அவர் புகாரில் கூறியுள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வீரலட்சுமி கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE