அனுமதியின்றி ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த தடை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மெரினா கடற்கரையைப் போலவே எண்ணூர் தொடங்கி கோவளம் வரையிலான 20 கடற்கரைகளை மேம்படுத்தும் நோக்கில், `சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை’ சிஎம்டிஏ செயல்படுத்தஉள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதிகளில் திறந்தவெளி பூங்கா, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான மைதானம், மரப்பாலம், கடல்காட்சிப் பாலம், ஆம்பி தியேட்டர் இருக்கைகள், நீர் விளையாட்டு, நடைபாதை, சைக்கிளிங் ட்ராக், கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளில் சி.எம்.டி.ஏ ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் சார்பில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆமை இனப்பெருக்க பகுதி: இத்திட்டத்துக்காக ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் கடற்கரை மணல் பகுதியை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகளும் வெளியாகின.

இதன் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கிடையே, ஈஞ்சம்பாக்கம் – அக்கரை கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு எதிராக சரவணன் என்ற மீனவரும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகளை நேற்று விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாரயணா, உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த சிஎம்டிஏவுக்கு தடை விதித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE