மேலக்கோட்டையூர்: வி.ஐ.டி சென்னையில் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி மற்றும் உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனாபாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக மத்தியநிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறைஅமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, கவுரவவிருந்தினராக எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சேதனா பட்நாயக்ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில், 38 பேர் தங்கப்பதக்கங்கள் உட்பட இளங்கலையில் 2,144, முதுகலையில் 817, ஆராய்ச்சிமாணவர்கள் 95 என மொத்தம் 3,056 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
விழாவில், மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பேசியதாவது: இந்தியா உலக அளவில் 5-வது பொருளாதார நாடாக தற்போது உள்ளது. விரைவில் 3-வது மிக பெரிய நாடாக மாறும். எளிதில் தொழில் தொடங்குவதற்கான நாடுகள் வரிசையில் 2014-ம் ஆண்டு 142-ம் இடத்தில் இருந்த நாம் தற்போது 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
பெற்றோர், ஆசிரியர்கள், தாய்மொழி, தாய் நாட்டை மறக்கக்கூடாது. நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் நம் முன்னேற்றத்துக்காக உதவியவர்களை வாழ்வில் மறக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
» அரசு பள்ளி எஸ்எம்சி குழுக்களுக்கு உறுப்பினர் தேர்வு: எமிஸ் தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்தியாவின் 145 கோடி மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே பட்டதாரிகள். உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27 சதவீதம் மட்டுமே. அது 50 சதவீதமாக உயர வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு இந்தியா 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது.
இதனால் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. கல்விக் கூடங்களில் கட்டுமானங்களுக்கு அரசு 18 சதவீதம் முதல் 28 சதவீதம்வரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை அரசு ரத்து செய்ய வேண்டும்.
பெண்களுக்கு பணி வாய்ப்பு அதிகம் வழங்கப்பட வேண்டும். உண்மையான சுதந்திரம் கல்வி வாயிலாக மட்டுமே கிடைக்கும். வளர்ந்த நாடுகளில் தனி நபர் வருமானம் 13,000 டாலர்களாக உள்ளது. ஆனால் இந்தியாவில் அது 2,700 டாலர்களாக மட்டும் தான் உள்ளது என்றார்.
வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், வி.ஐ.டி வேலூர் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.