"நீதி தாமதமாகலாம். இறுதியில் நீதியே வெல்லும்" என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். அவரது பதவிக் காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை மாநில சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையிலிருந்து வெளியே வருவேன் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருக்கிறார். இது தொடர்பாக மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "தோல்வி பயத்தில் என்னை சிறை வைத்துள்ளார்கள். மக்களிடம் இருந்து என்னை ஒரு நிமிடம் கூட பிரிக்க முடியாது. நீதி தாமதமாகலாம். இறுதியில் நீதியே வெல்லும்" என்று தெரிவித்திருக்கிறார். ஊழல் வழக்கில் கைதாகி உள்ள சந்திரபாபு நாயுடு 45 நாட்களாக சிறையில் இருக்கிறார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.