அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அதிமுக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்குழு இன்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்துகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான பணிகளில் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை குழு போன்றவற்றை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே அமைத்துள்ளன.
திமுக தரப்பில் கனிமொழி எம்.பி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஏற்கெனவே பணிகளை தொடங்கி விட்டது. அதேபோல டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் 5 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முதன்முறையாக இன்று கூடுகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு இன்று கூடும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை முன்வரவில்லை. எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் என சிறு,சிறு கட்சிகள் மட்டுமே அதிமுகவுடன் உள்ளன. இதனால் தொகுதி பங்கீட்டுக் குழுவுக்கு பெரிய வேலைகள் எதுவும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.