கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

By ஆர்.ஆதித்தன்

கோவை: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தது. இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்த நாடு தழுவிய போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாள வெளி நோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை ஒரு மணி நேரம் நடந்தது.

இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கோவை கிளையைச் சேர்ந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையில் நேர்மையான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு புறுநோயாளிகளாக சுமார் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு உட்பட பல்வேறு மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். அதேபோல கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE