சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் மேற்கூரை உட்புற சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சேலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (62). இவர் சென்னை மேற்கு சைதாப்பேட்டை துரைசாமி தோட்டம் 2-வது தெருவில் உள்ள தனது மூத்த சகோதரி கன்னியம்மாள் (76) வீட்டுக்கு கடந்த 18-ம் தேதி வந்திருந்தார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் அவர்கள் வசித்த வீட்டின் தரைதளத்தில் உள்ள வீட்டின் மேற்கூரையின் உட்பகுதி சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்ததாக தெரிகிறது. பெரிய அளவிலான கனத்த சிமென்ட் பூச்சு என்பதால் செல்லம்மாள் முகத்திலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே இறந்தார்.
மேலும், கன்னியம்மாளின் வலது காலிலும் காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சைதாப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் கன்னியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
» பாரிமுனை பழைய சட்டக்கல்லூரி அருகே 5 மாடி நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஐகோர்ட் அனுமதி
விருந்துக்கு வந்தவர் உயிரிழந்தார்:இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை போலீஸார், செல்லம்மாள் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம்குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சகோதரியின் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மூதாட்டி எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சைதாப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.