மகளிர் உரிமைத் தொகை பெற சிறப்பு முகாம் என வதந்தி: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள் ஏமாற்றம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: விழுப்புரம் மாவட்டத்தைப் போலவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற சிறப்பு முகாம் நடைபெறுவதாக, சமூக வலைதளத்தில் பரவிய தவறான தகவலை நம்பி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெண்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்திட, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று (17-ம் தேதி), 19 மற்றும் 20-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், முகாமில் மனுக்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் எனவும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலையில், மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், ஓசூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் சாரை சாரையாக வந்தனர்.

விண்ணப்பத்துடன் வந்திருந்த பெண்கள் சிலர் கூறும்போது, “மகளிர் உரிமைத் தொகை தகுதியான சிலருக்கு இதுவரை கிடைக்கவில்லை. உரிமைத் தொகை பெறுவதற்காக, குறைதீர் கூட்டம், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் அளித்தும் பயனில்லை. இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு, பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் பெறுவதற்கு, இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதாக, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் சிலர் தகவல் அளித்தனர். அதனை நம்பி இங்கு வந்தோம். ஆனால், இங்கு எந்த முகாமும் நடைபெறவில்லை” என வேதனையுடன் தெரிவித்தனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பம் அளிக்க வந்த பெண்களை, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து, “சிறப்பு முகாம் என்பது தவறான தகவல். அப்படி முகாம் நடைபெறுவதாக இருந்தால், மாவட்ட ஆட்சியர் மூலம் உரிய முறையில் தகவல் அளிக்கப்படும்” எனக் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்க பெறாதவர்கள் 3 நாட்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் மனு வழங்கலாம் என கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப், மூலமாக தவறான செய்தி பொதுமக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் தவறானது. எனவே, பொதுமக்கள் இச்செய்தியினை நம்ப வேண்டாம். தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE