பறவைகளை வேட்டையாடிய கும்பலிடம் பணம் பறித்த போலீஸார்: எஸ்.ஐ உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

By டி.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் புத்தாநத்தம் உதவி ஆய்வாளர் லியோ ரஞ்சித் குமார் தலைமையில் காவலர்கள் வீரபாண்டி, வையம்பட்டி சாகுல் ஹமீது, மணப்பாறை மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தனிப்படையினர் கடந்த 9.5.24 அன்று காலை 10.30 மணியளவில் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக ‘ஏர் கன்’ மூலம் பறவைகளை சுட்டு வேட்டையாடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கல்லி அடைக்கம்பட்டி சாமிகண்ணு மகன் சதாசிவம் (28), சுப்பிரமணி மகன் ராமசாமி (25), மலைக்குடிப்பட்டி சுப்பிரமணி மகன் நாகராஜ் (33) ஆகியோரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர்.

விசாரணைக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவர்களிடம் தனிப்படை போலீசார் 1 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுள்ளதாக மாவட்ட எஸ்பி-யின் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் அதுகுறித்து விசாரணை நடத்த திருச்சி மாவட்ட எஸ்பி-யான வருண்குமார், தலைமையிடத்து ஏடிஎஸ்பி-யான கோபாலசசந்திரனுக்கு உத்தரவிட்டார்.

ஏடிஎஸ்பி விசாரணையில், குற்றச்சாட்டு உறுதியானதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் லியோ ரஞ்சித்குமார் மற்றும் 3 காவலர்களையும் எஸ்பி-யான வருண்குமார் இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE