சென்னை: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 13 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கங்காதரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு அதிகாரிகள் கூட்டணி அமைத்து கையாடல் செய்துள்ளனர். எனவே, தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், பிரதமர் வீட்டு வசதித் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், கையாடல் செய்த தொகையை திருப்பி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
» ரயில் நிலையத்திலேயே பிரசவம்: பெரம்பூரில் ரயிலுக்காக காத்திருந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!
» கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை: அரியலூரில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்