ரயில் நிலையத்திலேயே பிரசவம்: பெரம்பூரில் ரயிலுக்காக காத்திருந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

By மு.வேல்சங்கர்

சென்னை: தன்பாத் விரைவு ரயிலில் செல்வதற்காக, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு, அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஜித் கந்துல்னா. இவரது மனைவி மெபல் புனியா(20). சுஜித் கந்துல்னா தனது மனைவியுடன் பெரம்பூரில் தங்கி, கட்டுமான வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மெபல் புனியாவை சொந்த ஊருக்கு ரயிலில் அழைத்து செல்ல சுஜித் கந்துல்னா முடிவு செய்துள்ளார். அதன்படி, ஆலப்புழாவில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக தன்பாத் செல்லும் விரைவு ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தார்.

இந்த ரயிலில் பயணிப்பதற்காக இருவரும் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு வந்து, ரயில் நிலைய காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தனர். அப்போது, மெபல் புனியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ரயில்வே போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்தனர். மேலும், அங்கிருந்த பெண் பயணிகள், பெண் போலீஸார் ஆகியோர் மெபல் புனியாவுக்கு உதவியாக இருந்தனர்.

இதற்கிடையில், பிரசவ வலியால் துடித்த அவருக்கு சில நிமிடங்களில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தையையும், தாயையும் சிறப்பு உதவி ஆய்வாளர் மார்க்கபந்து மற்றும் ஆர்பிஎஃப் பெண் காவலர் பாதுகாப்பாக, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.ஏ.எம். அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE