கரூர்: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 1 மணி நேரம் பணி புறக்கணித்து, ஆர்ப்பாட்டமும், கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் சேவையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்குவங்க முதுகலை பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சிறப்புச் சட்டத்தை (மத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம்) இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக கரூர் கிளை தலைவர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆக. 17) கருப்புப்பட்டை அணிந்து 1 மணி நேரம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளை புறக்கணித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் என 700-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி முன்பு கருப்புப்பட்டை மற்றும் கருப்பு ஆடைகள் அணிந்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். மேலும் மருத்துவக் கல்லூரியினுள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அனைவரும் 1 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.