இபிஎஸ் வகுத்து தரும் வியூகப்படி தேர்தல் பணியாற்ற முடிவு: அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

By KU BUREAU

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வகுத்து தரும் தேர்தல் வியூகத்தின்படி, வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்வது என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக தொடர் தோல்விகளுக்கு நான் மட்டுமே காரணம் என்பதைப்போல பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டுகின்றனர். மக்களவைத் தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தவிர்த்து மற்ற தேர்தல்கள் அனைத்தையும் பன்னீர்செல்வத்துடன் இணைந்தே சந்தித்தோம். இப்போது தோல்விகளை மட்டும் என் மீது சுமத்துவதை ஏற்க முடியாது. அதனால் அதுபோன்ற விமர்சனங்களை பொருட்படுத்தாது, நிர்வாகிகள் உற்சாகமாக பணியாற்றி கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக பணியாற்றி, பெருவாரியான இடங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் போதிய கவனம்செலுத்தவில்லை என்று கூறி இந்தக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்து தரும் தேர்தல் வியூகப்படி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் பணியாற்றி மகத்தான வெற்றியை பெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற திமுக அரசு தவறியுள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை. இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்குடன் அரசு செயல்பட்டுள்ளது. இதற்கு அதிமுக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களையும் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 306 பேரின் மறைவுக்கும் வயநாடு நிலச்சரிவு, கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் உள்ளிட்டவற்றால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE