அம்பை அருகே புலி நடமாட்டம் வதந்தி: மக்கள் அச்சப்பட தேவையில்லை என வனத்துறை அறிவிப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு பாப்பான்குளம் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் பகிரப்பட்ட செய்தி வதந்தி என்றும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:"அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெற்கு பாப்பான் குளம் பகுதியில் நேற்று முன்தினம் (15-ம் தேதி) மாலை புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநர் உத்தரவின் படி, புலி நடமாட்டம் குறித்து விசாரணை செய்ததில், இந்த புகைப்படம் மேற்கு வங்காளம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட புலியின் படம் என்பது உறுதி செய்யப்பட்டது. மணிமுத்தாறு மற்றும் தெற்கு பாப்பான் குளம் பகுதிகளில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை.

எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இது போன்று சமூக வலைத்தளங்களில் வன விலங்குகள் நடமாட்டம் குறித்து பொய்யான செய்தி பரப்பி பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE