சாரல் மழை பெய்து வருவதால் பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்கவும்: வனத்துறை அறிவுறுத்தல்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், ஆடி மாத பவுர்ணமி வழிபாட்டிற்கு சதுரகிரி வருவதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் தேவராஜ் கூறுகையில்,"கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும். தினசரி மழைப் பொழிவை பொறுத்தே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறிவிக்கப்படும். ஆகவே, ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் சதுரகிரி வருவதை தவிர்க்க வேண்டும்" என்று காப்பக இணை இயக்குநர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE