வயநாடு நிலச்சரிவு தொடர்பாக வதந்தியை பரப்புகிறது கேரளா: மதுரை விவசாயிகள் கொந்தளிப்பு

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவுக்கும், முல்லை பெரியாறு அணைக்கும் தொடர்புபடுத்தி கேரளாவில் பொய்யான தகவல்களை அரசும், அரசியல் கட்சிகளும் பரப்பி வருகின்றனர். இதைக் கண்டிக்க வேண்டும் என மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இன்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநர் ப.சுப்புராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

கேரளாவில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவுக்கும், முல்லை பெரியாறு அணைக்கும் தொடர்பு படுத்தி கேரளாவில் பொய்யான தகவல்களை அரசும், அரசியல் கட்சிகளும் பரப்பி வருகின்றனர். முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிடுகிறது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அதற்கு இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஒட்டுமொத்தமாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, “இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. விவசாயிகள் கோரிக்கையை மனுக்களாக தந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார்.

தொடர்ந்து விவசாயிகள் மற்றும் ஆட்சியர் இடையே நடந்த விவாதம் வருமாறு;

விவசாயி எம்.பி.ராமன்: "5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

மணிகண்டன்: "58 கிராம கால்வாயை ஒட்டி 28 கி.மீ தூரத்திற்கு வண்டிப் பாதையை சீரமைக்க வேண்டும்" என்றார்.

பழனிச்சாமி: "முல்லை பெரியாறு, வைகை அணைகளிலிருந்து உரிய முறைப்படி தண்ணீர் திறக்க வேண்டும். இப்போதே அணையிலிருந்து தண்ணீர் திறந்தால் தான் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதற்கு முன்னர் ஆட்சியர்களாக இருந்த வீரராகவ ராவ், அனீஷ்சேகர் காலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுபோல் தற்போதும் திறக்க வேண்டும்" என்றார்.

ஆட்சியர்: "தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அணையில் தண்ணீர் வரத்து, இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், விவசாயிகளோடு கலந்தாலோசனை செய்தும் விரைவில் அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மலைச்சாமி: ஏற்கெனவே 14 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றேன். மீண்டும் செல்நீக்கி அதே நிலத்தை அடமானம் வைக்க பத்திரப்பதிவு செய்யச் சென்றால் சிட்டம்பட்டி சார் பதிவாளர் பதிவு செய்ய மறுக்கிறார். கேட்டால் அமைச்சரிடம் எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்கிறார். இதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அடமானக் கடன் பெற முடியாமல் தவிக்கிறேன். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்" என்றார். (அப்போது குறுக்கிட்ட அதிகாரிகள் தேவையில்லாமல் அமைச்சர் பெயரைச் சொல்லாதீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை என்னவென்று மட்டும் சொல்லுங்கள் என்றனர்)

அருண்:"உதினிப்பட்டி கிராமத்திலுள்ள கண்மாய்களில் உள்ளூர் ஆயக்கட்டுதாரர்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்காமல், 15 கி.மீ அப்பாலுள்ள கிராமத்தினருக்கு இங்கு வந்து மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளனர்" என்றார்.

ஆட்சியர்:"சென்னையில் நடந்த கூட்டத்தில் ஒரே தாலுகாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம் என எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படியே நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்" என்றார்.

முருகன்:"மேலூர் நகராட்சியில் முல்லை பெரியாறு கால்வாயில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், நகராட்சி குப்பைகளை கொட்டி தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்துகின்றனர். இந்த குப்பை கூளங்களை அகற்றுவதற்கு பொதுப்பணித் துறையினர் ரூ.5 லட்சம் வரை செலவழித்ததாக கூறுகின்றனர். இதனால் மற்ற கால்வாய்களை சீரமைக்க நிதியில்லை என மறுக்கின்றனர். எனவே மேலூர் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த செலவை அவர்களே ஏற்க செய்ய வேண்டும்" என்றார்.

ஆட்சியர்:"மேலூர் நகராட்சி ஆணையாளர் வந்துள்ளாரா?. ஏன் அவர் கூட்டத்திற்கு வரவில்லையா? உடனடியாக அவருக்கு போன் செய்து வரச்சொல்லுங்கள். பொதுப்பணித்துறையினர் நீங்கள் ஏன் செலவழிக்கிறீர்கள். குப்பைகள் கொட்டும் நகராட்சியை அகற்றச் சொல்லுங்கள். அதற்கான செலவை அவர்களே ஏற்கச் சொல்லுங்கள்" என்றார்.

ஜீவா:"கொட்டாம்பட்டி கேசம்பட்டியில் முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் கட்டப்பட்ட பெரியருவி நீர்த்தேக்கத்தை சீரமைக்க வேண்டும். அணையை தூர்வர வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE