ஆளும்கட்சிக்குள்ளேயே மோதல்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம்

By த.அசோக் குமார்

தென்காசி: கடையநல்லூர் நகராட்சியில் ஆளும் கட்சிக்குள்ளேயே கவுன்சிலர்களுக்கு இடையில் பிரச்சினை வெடித்ததால் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகர்மன்றக் கூட்டம் நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 15 வார்டுகளிலும், அதிமுக 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5, பாஜக 3, அமமுக 1, எஸ்டிபிஐ 1, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர். திமுக-வைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நகர்மன்றக் கூட்டங்கள் சுமுகமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக திமுக கவுன்சிலர்களுக்கு இடையே பூசல் ஏற்பட்டதால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டது.

வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை, வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று புகார் கூறி நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக சில கவுன்சிலர்கள் மனு அளித்தனர். உறுப்பினர்களின் கையெழுத்து பிரச்சினை தொடர்பாக அந்த மனு நகராட்சி ஆணையரால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டத்தில் 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என கருதப்பட்ட நிலையில் சுமுகமான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE