ஒத்துழைக்காவிட்டால் 4 மாதத்திலேயே ஆணையாளரை மாற்றுவீர்களா? - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘‘உங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் 4 மாதம், 6 மாத்திற்கு ஒரு முறை ஆணையாளரை மாற்றுவீர்களா? ’’ என அதிமுக கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் திமுக கவுன்சிலர்களுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி புதிய ஆணையாளராக இன்று காலை லி.மதுபாலன் பொறுப்பேற்ற உடனடியாக நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றார். மாநகராட்சி விவரங்கள் எதுவும் அவருக்கு தெரியாததால் அவர் விவாதங்களில் பங்கேற்காமல் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரங்கள்...

மண்டலத்தலைவர் வாசுகி: மழைக்காலம் தொடங்கிவிட்டது. பாதாளசாக்கடைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், புதிய சாலைப் பணிகள் மந்தமாக நடக்கிறது. துரிதப்படுத்த வேண்டும். மக்கள் நடந்து செல்லவே முடியாத நிலையில் சாலைகள் மோசமாக உள்ளன.

மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா: ஒப்பந்ததாரர்கள் ஒரே நேரத்தில் சாலைகளை தோண்டுகிறார்கள். பணிகளை முடிக்காமல் அப்படியே போட்டு செல்கிறார்கள். கடந்த ஆண்டு 3 பேர் பள்ளங்களில் விழுந்து இறந்துள்ளனர். அப்படியிருந்தும் ஒப்பந்ததாரர்கள் திருந்துவதாக இல்லை. சாலைகள் போடுவதற்காக ஜல்லி கற்களை பரப்பி செல்கின்றனர். அதன்பிறகு சாலைகள் போடுவதில்லை. அதனால், சைக்கிளில் செல்லும் பள்ளி குழந்தைகள் ஜல்லிகளில் சருக்கி விழுந்து காயமடைகின்றனர். முதியவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. ஒப்பந்ததாரர்களை கண்டித்து வேலை வாங்குவது யார்?.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன்

காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன்: ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் கவுன்சிலர்களை மதிப்பதே இல்லை. பணிகளை மேற்கொள்ள கெஞ்ச வேண்டிய உள்ளது. என்னுடைய வார்டுக்கு மேயர் ஆய்வுக்கு வருவதே இல்லை. வந்தாலும் சொல்வதில்லை. மழைநேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு சாலைகள் மோசமாக உள்ளது. மாநகராட்சி வளாகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலே காலையில் நடைப்பயிற்சி செல்வோரிடம் ரூ.1000 வசூல் செய்கிறார்கள். மாநகராட்சி அனுமதியளித்துள்ளதா?

மேயர் இந்திராணி; யாருக்கும் அனுமதியும் கொடுக்கவில்லை. ரசீதை கொடுங்கள் யார் வசூல் செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயராமன்(திமுக): எம்ஜிஆர் காலத்தில் 15 திருமண மண்டபங்களை மாநகராட்சிக்கு கட்டிக் கொடுத்தார். ஆரப்பாளையத்தில் அதில் ஒரு மண்டபத்தில் கரிமேடு போலீஸ்நிலையம் செயல்படுகிறது. அதற்கான வாடகையை அவர்கள் மாநகராட்சிக்கு செலுத்துவதில்லை. ஹெல்மெட் போடாவிட்டால், நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினால் சாவியை பிடுங்கிவிட்டு பின்னாடியே வந்து அபராதம் வசூல் செய்யாமல் விட மாட்டார்கள். ஆனால், அவர்களிடம் மாநகராட்சி வாடகையை வாங்காமல் இருப்பது ஏன். ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ்நிலையங்களில் கடைகள் வாடகை கட்டாமல் லட்சக்கணக்கில் வாடகை பாக்கி வைத்திருக்கிறார்கள். 2 ஆயிரம் சதுர அடிக்கு அனுமதிவாங்கிவிட்டு, 6 ஆயிரம் சதுர அடி, 8 ஆயிரம் சதுர அடிக்கு கட்டிடம் கட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கையும் இல்லை. அபராதமும் விதிப்பதில்லை. பிறகு எப்படி மாநகராட்சியின் வருவாயை பெருக்க முடியும். ஆரப்பாளையம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார் கொடுத்தும் அதிகாரிகள் அகற்றுவதில்லை. அதிகாரிகள் செயல்பட வைக்க மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா: மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரை 4 மாதத்திலே மாற்றியுள்ளீர்கள். 3 ஆண்டிற்குள் 4 ஆணையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மாநகராட்சியை பற்றி புரிந்து கொள்ளவே 4 மாதம் பிடிக்கும். அதற்குள் அவரை மாற்றினால் எப்படி மக்கள் பிரச்சினைகளை சரி செய்ய முடியும். உங்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் 4 மாதம், 6 மாத்திற்கு ஒரு முறை ஆணையாளரை மாற்றுவீர்களா?. 13 மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. நானும் 4 மாதமாக சொல்லிக் கொண்டு வருகிறேன். மழைகாலம் நெருங்கிவிட்டது. மழைநீர் வாய்க்காலும் இல்லை. வெள்ளத்தில் மதுரை மிதக்கப்போவது உறுதி. மக்கள் ரொம்ப சிரமப்படுவார்கள். டெங்கு, மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகமாகும்.

தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டப்படி, மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றத்தை கண்டித்து வெளிநடப்பு செய்ததால், அவர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

குமரவேல் (சிபிஎம்): திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப்பணி தனியார் மயமாக்குவதை கைவிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி மாநகராட்சியும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

பாஸ்கரன் (மதிமுக): மீனாட்சியம்மன் கோயில் உள்ள என்னுடைய குப்பை அள்ள வாகனங்கள் இல்லை. ஆட்களும் இல்லை.

பாதாளசாக்கடை அடைப்பு ஏற்பட்டால் கழிவுநீரை உறிஞ்சும் வாகனம் வருவதற்கு 4 நாட்கள் ஆகிறது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் குப்பைகளில், கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய உள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வாங்கி கொடுத்த சூப்பர் சக்கர் வாகனத்தை காணவில்லை.

மண்டலத்தலைவர் முகேஷ்சர்மா: உங்களுக்கு மட்டும் டீ கொடுக்கிறார்கள். எங்களுக்கும் டீ கொடுக்க சொல்லுங்கள். வெறும் ஸ்நாக்ஸ் மட்டும் கொடுக்கிறீர்கள். அதும் தரமில்லை

கவுன்சிலர் ஜெயராமன்: அரசரடி ரயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு விற்கப்பார்க்கிறது. தினமும் பல ஆயிரம் பேர் நடைப்பயிற்சி செல்கிறார்கள். மாணவர்கள் விளையாடுகிறார்கள். பிடி.உஷா இந்த மைதானத்தில் ஓடியுள்ளார். இந்த மைதானத்தை விற்பதை தடுக்க வேண்டும்

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE