விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்க உள்ள இடங்களில் மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று நேரில் ஆய்வு செய்தார்.
விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட 11 இடங்களில் ரூ.233 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்பாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் திமுக எம்எல்ஏ-வான ஏ.ஆர்.ஆர் சீனிவாசன், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளான விருதுநகர் - புல்லக்கோட்டை, வடமலைகுறிச்சி, விருதுநகர் ஆட்சியர் அலுவலகம், ஆர்.ஆர் நகர், சாத்தூர் படந்தால் ஆகிய பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டுகின்றன. இதனால், இப்பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களின் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இப்பகுதிகளில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைக்க வலியுறுத்தி விருதுநகர் எம்.பி-யான மாணிக்கம் தாகூர் மக்களவையில் பேசினார். அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவின் பேரில் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள 11 இடங்களில் சாலை மேம்பாலங்கள் மற்றும் அணுகு சாலைகள் அமைப்பதற்காக ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
» ‘மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை’ - அதிமுக செயற்குழு தீர்மானத்தில் கண்டனம்
» நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது: கட்டண விவரம் இதோ!
இதனையடுத்து இன்று மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் விருதுநகர் எம்எல்ஏ-வான சீனிவாசன், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பாலம் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.