‘மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை’ - அதிமுக செயற்குழு தீர்மானத்தில் கண்டனம்

By KU BUREAU

சென்னை: மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் பின்வருமாறு,

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்துத் தரும் தேர்தல் வியூகப்படி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றிபெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிப்போம்.

நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை திமுக அரசு வழங்கவில்லை. இலவச வேட்டி சேலை, வழங்குவதிலும், இலவச பள்ளி சீருடைகள் வழங்குவதிலும் திமுக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதற்கு கண்டனம்.

மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்திடவும், மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்தவும் வேண்டும். தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றத் தவறியதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காதது, இலவச வேட்டி சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்கோடு செயல்படுவதற்கு கண்டனம்.

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை. வேதனை ஆட்சியே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம். மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தப்படுகிறது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தப்படுகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE