ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரிக்கை: ஆகஸ்ட் 21ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

By அ.கோபாலகிருஷ்ணன்

ராஜபாளையம்: ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21ல் ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவர் என அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ராமசுப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராமசுப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்கக்கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் சங்க மாநில நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 21ம் தேதி அனைத்து ஊராட்சி செயலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக செப்டம்பர் 27ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பு மாநில அளவிலான முறையீட்டு இயக்கம் நடத்தப்படும்' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE