மருத்துவக் காரணங்களுக்காக கூட ஜாமீன் தரமுடியாது... உயர்நீதிமன்ற உத்தரவால் செந்தில் பாலாஜி ’ஷாக்’!

By காமதேனு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏற்கெனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும், அவரது ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் கடந்த 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அன்று மாலையே மீண்டும் அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சூழலில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி கடந்த 14 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார். அப்போது, “உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் 45 வது பிரிவு பொருந்தாது” என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன். “செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருக்கிறது . எனவே மருத்துவ காரணத்திற்காககூட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க முடியாது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE