நீண்டகாலமாக சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கோரும் மனு: வரிசைப்படி பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

By KU BUREAU

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் யசோதா என்பவர் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், “என் கணவர் ஈஸ்வரன், கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை முன்கூட்டியே விடுவிக்கும்படி கடந்த ஜூலை 5-ம் தேதி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கணவரை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அமர்வுபிறப்பித்த உத்தரவு வருமாறு:

பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகளை உரிய காலகட்டத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டியது அதிகாரிகளின்கடமை. இதில் தாமதம் ஏற்பட்டால், அது சிறைவாசிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி வைத்த கையோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருகின்றனர். மறுபுறம் சிலர் வழக்கு தொடரமுடியாத நிலையில் உள்ளனர்.

எனவே கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி மாநில மற்றும் மாவட்டஅளவில் கமிட்டிகளை ஏற்படுத்தி,மனுவை பரிசீலிக்க வேண்டும். மேலும், அந்தந்த சிறை கண்காணிப்பாளர்கள் தங்கள் முன்பாக நீண்டகாலமாக நிலுவையில் விண்ணப்பங்களை பதிவேடுகளில் பதிவு செய்து அவற்றை வரிசைப்படி பரிசீலிக்க வேண்டும்.

இதுதொடர்பாக சிறைத்துறை டிஜிபி 4 வார காலத்துக்குள் சுற்றறிக்கை பிறப்பி்க்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்.5-க்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE