திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்பு

By KU BUREAU

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், ஆளுநர்ஆர்.என்.ரவி, ராஜ்பவனில் நேற்றுஅளித்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

குடியரசு தினம், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அன்று மாலை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டதால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றன.

இந்த ஆண்டு சுதந்திர தின தேநீர் விருந்துக்கு ஆளுநர் தரப்பில் இருந்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. ஆனால், திமுக தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த சூழலில் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். அரசின்சார்பில் முதல்வர், அமைச்சர்கள்அந்த விருந்தில் கலந்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறோம். ஆளுநரின் கருத்தியல் சார்ந்தவிஷயங்களில் திமுகவுக்கு கருத்துவேறுபாடு உள்ளது. ஆனால், ஆளுநர் என்ற பதவி மீது முதல்வர் பெரும் மதிப்பு வைத்துள்ளார். ஆளுநரின் பதவிக்கு மதிப்பளித்து தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளோம்’’ என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர்விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

அதன்பின், நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை அவர்களின் இருக்கை அருகில் சென்று ஆளுநர்வரவேற்றார். தொடர்ந்து. நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், முதல்வரின் செயலர் நா.முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்கள் தவிர, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேநீர் விருந்தின்போது, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வஉசி, பாரதியார் தொடர்புள்ள கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE