நியோமேக்ஸ் வழக்கில் ஒப்புகை நகல்கள் வழங்குவதில் காலதாமதம்: புகார்தாரர்கள் புலம்பல்

By என்.சன்னாசி

மதுரை: பொருளாதார குற்றத்தடுப்பு காவல் பிரிவில் 'நியோமேக்ஸ்' முறைகேடு புகார்தாரர்களுக்கு ஒப்புகை நகல்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுவருவதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புலம்புகின்றனர்.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நியோ மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டது. இதன் துணை நிறுவனங்கள் 15க்கும் மேற்பட்டவை இயங்கின. இந்நிறுவனங்கள் கூடுதல் வட்டி, குறிப்பிட்ட ஆண்டில் முதலீடு தொகைக்கு இரட்டிப்புத் தொகை வழங்குவதாக விளம்பரம் செய்தன. தமிழகம் முழுவதும் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த சங்கிலித் தொடர் தொழிலில் இணைந்தனர்.

இந்நிறுவனங்கள், முகவர்களை நியமித்து மதுரை,தேனி , திண்டுக்கல்,விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை,கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை என, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோரிடம் இருந்து முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதலீட்டாளர்களுக்கு இரடிப்புத் தொகை மற்றும் வட்டி தராமல் சுமார் பல்லாயிரம் கோடிக்கு மேல் ஏமாற்றியதாக அந்த நிறுவனங்களுக்கு எதிராக புகார்கள் எழுந்தன.

முதலில் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் கொடுத்த புகார்களின் பேரில் மதுரை, திருச்சியிலுள்ள பொருளாதார குற்றப் பிரிவு வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், தமிழகம் முழுவதும் நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் மதுரையில் சிறப்பு டிஎஸ்பி மணிஷா என்பவர் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.

முக்கிய நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக் கண்ணன், பால சுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் 35க்கும் மேற்பட்டோரும் கைது செய்தனர். சில இடங்களில் நிறுவனங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான அசையும், அசையா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது.

இந்நிலையில், 'நியோமேக்ஸ்' நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோர் தயக்கிமின்றி புகார் அளிக்கலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு தொடர்ந்து அறிவுறுத்தியதால் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. இப்புகார்களுக்கு பொருளாதார குற்றப் பிரிவு- மதுரை, நியோமேக்ஸ் வழக்கு (3/2023) என்ற படிவம் மூலம் புகார்தாரர்கள் தரும் விவரங்கள் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்பு காவல்துறையினர் 2 அல்லது 3 பக்கம் கொண்ட ஒப்புகை நகல் (சிஎஸ்ஆர் போன்று-) வழங்குகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் இந்த ஒப்புகை நகல் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. காவல்துறையினர் பற்றாக்குறையால் காத்திருக்கவேண்டியுள்ளது. விரைந்து ஒப்புகை நகல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த முதலீட்டாளர் பார்த்தசாரதி கூறியது: ''மதுரை பொருளாதார குற்ற காவல் பிரிவில் புகார் செய்து ஒப்புகை நகல் வாங்காதோர் அதிகம் உள்ளனர். ''5A செட்டில் மெண்ட்' என்ற விதிப் படி, 'நியோமேக்ஸ்' நிறுவனம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு செட்டில்மெண்ட் செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது. முடிந்தவரை பணம் அல்லது நிலமாகவோ வாங்குவதற்கு நாங்களும் தயாராகிவிட்டோம்.

இதுவும் பொருளாதார குற்றப் பிரிவு வழியாகவே பெற முடியும். இதற்கு புகார் மனு ஒப்புகை நகல் என்பது முக்கியம் என்கின்றனர். இதுவரை சுமார் 6000 பேர் புகார் கொடுத்தாக தெரிகிறது. 1000க்கும் மேற்பட்டோருக்கும் மட்டுமே ஒப்புகை ரசீது நகல் வழங்கப்பட்டுள்ளது. நான் 6 மாதத்திற்கு முன்பு புகார் கொடுத்தும், இன்னும் வாங்க முடியவில்லை. நிலுவையிலுள்ள புகார்களுக்கான ஒப்புகை நகல்களை விரைவில் வழங்கவேண்டும்'' என்றார்.

பொருளாதார குற்ற தடுப்பு காவல்துறையினர் கூறுகையில், ''இப்பிரிவில் கொடுக்கும் புகார்களுக்கு பிற காவல் நிலையம் போன்று சிஎஸ்ஆர் நகல் வழங்கப் படாது. நியோமேக்ஸ் முதலீட்டாளர்களின் புகார் விவரம் அடிப்படையில் சம்பந்தப்பட்டோருக்கு ஒப்புகை ஜெராக்ஸ் நகல் வழங்கப்படுகிறது. இதுவே சிஎஸ்ஆர் மாதிரி தான். பணியில் இருக்கும் காவல் துறையினர் வைத்து துரிதமாகவே வழங்குகிறோம். இது வரையிலும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். இப்புகார்களின் அடிப்படையில் சுமார் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. முறையாக விசாரிக்கிறோம்,'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE