கோவை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கோவையில் இரு இடங்களில் தேசிய புலனாய்வுக் குழு (என்ஐஏ) அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டு, அங்கு வசித்து வந்த இரு பயிற்சி மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டு வெடிப்பை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோவையில் இரு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
கோவை சாய்பாபா காலனி நாராயண குரு சாலையைச் சேர்ந்தவர் ஜாபர் இக்பால் (39). பெரிய சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் நகிம் சித்திக் (38). இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிமருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்களது வீடுகளுக்கு நேற்றுஅதிகாலை சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் குழுவினர், சோதனையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஜாபர் இக்பால், நகிம் சித்திக் ஆகியோரிடம், ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தகுண்டு வெடிப்பு, அதில் கைதுசெய்யப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு சோதனை மற்றும் விசாரணை நிறைவடைந்தது.
» ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்: 7 லட்சம் மலர்களை கொண்டு கண்காட்சி
» ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜக பொருளாளரிடம் சிபிசிஐடி விசாரணை
அவர்கள் பணியாற்றிய தனியார் மருத்துவமனையிலும், இருவரின் செயல்பாடுகள் குறித்து என்ஐஏகுழுவினர் விசாரித்தனர். மேலும், இருவரது செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். வரும் 23-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு இருவருக்கும் சம்மன் அளித்துவிட்டுச் சென்றனர்.
சோதனை நடந்த வீட்டின் அருகே மாநகர போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். சோதனை குறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘ஜாபர் இக்பால், நகிம் சித்திக் ஆகியோர் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். 2013-ல் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுள்ளனர். சிறையில் இருந்துவெளியே வந்த பின்னர், மருத்துவப் பணியைத் தொடர்ந்துள்ளனர்.
ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய நபர் ஒருவர் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களது செயல்பாடுகளை கடந்த சிலமாதங்களாக போலீஸாரும் கண்காணித்து வந்துள்ளனர்’’ என்றனர்.