சிறுவயதில் இருந்து பொம்மைகள் மீது இருந்த காதல் காரணமாக தற்போது 90 வயதிலும் உலக அளவில் கவனம் பெற்று வருகிறார் கேரளாவை சேர்ந்த பாலச்சந்திரன் பிள்ளை.
கொல்லம் மாவட்டம், சஸ்தம்கோட்டா அருகே உள்ள கன்னிமேலழிகாத்து என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் பிள்ளை. சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் ஏரோநாடிகல் இன்ஜினீயரிங் படித்த இவர், படித்ததை தேர்வு செய்யாமல், பிடித்ததை தேர்வு செய்தார்.
இவருக்கு சிறு வயதில் இருந்தே பொம்மைகள் மீது மிகுந்த ஆர்வம். அதன் நீட்சியாக பாலச்சந்திரன் பிள்ளை, வைல்ட் ரிபப்ளிக் (Wild Republic) என்ற பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் நிறுவனம் தொடங்கப்பட்டது.
தற்போது டென்மார்க், கனடா, ஆஸ்திரேலியா, ஷார்ஷா, இந்தியாவில் சென்னை என பொம்மை விற்பனையில் உலகம் அறிந்த நிறுவனமாக உள்ளது வைல்ட் ரிபப்ளிக். கே & எம் இன்டர்நேஷனல் என்ற பெயரில் தொடங்கப்பட்டு நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் வைல்ட் ரிபப்ளிக் என்று அறியப்படுகிறது.
அண்மையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொம்மைகள் கண்காட்சியில் பாலச்சந்திரன் பிள்ளையின் வைல்ட் ரிபப்ளிக் நிறுவனம் இரண்டு விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ஆண்டின் சிறந்த பொம்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய இரண்டு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உலக அளவில் மிகப்பெரிய பொம்மை விற்பனை நிறுவனமாக வைல்ட் ரிபப்ளிக் உள்ளது. இவரது நிறுவனத்தின் பொம்மைகள், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக தளங்களிலும் கிடைக்கின்றன. விலங்குகள் மற்றும் உயிருள்ளவற்றை பொம்மையாக செய்வதில் கைதேர்ந்த நிறுவனம் வைல்ட் ரிபப்ளிக்.
சிட்டுக்குருவி முதல் அனகோண்டா வரை பல்வேறு வடிவங்களிலும் வைல்ட் ரிபப்ளிக் நிறுவனத்தினர் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இந்தியாவில் மட்டும் 7 இடங்களில் பொம்மைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சர்வதேச விருதுகளை வென்ற பொம்மை காதலர் பாலச்சந்திரன் பிள்ளை, இன்னும் பல புதுமைகளை புகுத்த அயராது உழைத்து வருகிறார்.