நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலும், பழமை வாய்ந்த லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்திலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று காலை தாம்பூலத்தில் தேசியக்கொடி வைக்கப்பட்டு நடராஜர் பாதத்தில் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மேளதாளம் முழங்க கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தேசிய கொடி எடுத்துச் செல்லப்பட்டு 142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இது போலவே காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பழமை வாய்ந்த லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் இன்று காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு சுதந்திர தின விழா கொடியேற்றம் நடைபெற்றது.
ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர் சையது அன்வார் திருகுர்ஆன் வசனங்கள் ஓதி நிகழ்வை தொடங்கி வைத்தார். ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி நூருல் அமீன் ஹரத் தேசிய கொடி ஏற்றி இந்திய நாட்டு மக்கள் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ துஆ செய்தார். முஹம்மது அய்யூப் ஹரத் சுதந்திர தின தின சிறப்புரை ஆற்றினார். லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர்கள், மக்தப் மதரஸா மாணவர்கள் , ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.