ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்: 7 லட்சம் மலர்களை கொண்டு கண்காட்சி

By KU BUREAU

சேலம் : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, தோட்டக்கலைத் துறை சார்பில் அண்ணா பூங்காவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு, பிரம்மாண்டமான காற்றாலை, சுற்றுச்சூழலில் கடல் வாழ் உயிரினங்களின் பங்கை உணர்த்தும் வகையில் பவளப் பாறைகள், நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்த் தொட்டிகளைக் கொண்டு மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பூங்கா, ஏரிப் பூங்கா உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட செல்ஃபி பாயின்ட்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு படகு இல்லத்தில் இன்று காலை படகுப் போட்டி, நாளை அடுப்பில்லா சமையல் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் 25-ம் தேதி நாய்கள் கண்காட்சி, 26-ம் தேதிகுழந்தைகளுக்கான தளிர் நடைபோட்டி ஆகியவையும் நடைபெறுகின்றன. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் மற்றும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கான உள்வட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, சேலத்தில் இருந்து ஏற்காடுசுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர ரூ.300 கட்டணத்தில் பேக்கேஜ் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

ஏற்காட்டில் கோடை விழா ஏற்பாடுகளை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்றுஆய்வு செய்தார். கடந்த ஒருவாரமாக ஏற்காட்டில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், குளிர் மற்றும் பனிமூட்டம் அதிகரித்து, சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்தி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE