கும்பகோணம்: திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, கரும்பு விவசாயிகள் சங்க போராட்டக் குழு சார்பில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இருந்து தேசியக் கொடியுடன், புறப்பட்டு திருமண்டங்குடி போராட்ட பந்தலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
பாபநாசம் வட்டம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார். சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை முழுவதையும், புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்து, சிபில் ஸ்கோர் பிரச்சனையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும்,
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 2022-ம் ஆண்டு நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 625-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், சுதந்திர தினத்தையொட்டி, கரும்பு விவசாயிகள், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சன்னதியிலிருந்து தேசியக் கொடியுடன் பாதயாத்திரை புறப்பட்டு, திருமண்டங்குடி போராட்ட பந்தல் வரை, தமிழக அரசை வலியுறுத்தி, ஆலை நிர்வாகத்தைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டபடி சென்றனர்.
» போதையில்லா தமிழகம்: உதகையில் 10 கி.மீ. தூரம் மாணவர்கள் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்!
» ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்!
கரும்பு விவசாயிகள் சங்க போராட்டக் குழுச் செயலாளர் நாக.முருகேசன் தலைமை வகித்தார். தலைவர் தங்க.காசிநாதன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகி ஏ.சரபோஜி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
முன்னதாக சுவாமிமலை கோயில் முன்பு சூடம் ஏற்றி, சிதறு தேங்காய் உடைத்து, இந்த சுதந்திர தினத்தில் இருந்து, கரும்பு விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்க, முருகா நீயாவது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி, காப்பாற்று என முழக்கமிட்டப் பின் புறப்பட்டுச் சென்றனர். பின்னர், போராட்டப் பந்தலில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு, சமூகப்போராளி பி.காளியம்மாள், போராட்ட சமுகக் குழுத் தலைவர் எஸ்.சிமியோன்சேவியர்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.