ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜக பொருளாளரிடம் சிபிசிஐடி விசாரணை

By KU BUREAU

சென்னை/கோவை: சென்னை ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கோவையில் பாஜக மாநில பொருளாளரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

கடந்த ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணித்த 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடியைக் கைப்பற்றினர்.

இந்தத் தொகை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே, இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) கேசவ விநாயகம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சென்னை சிபிசிஐடி போலீஸார், கோவை சிபிசிஐடி போலீஸாருடன் சேர்ந்து கோவை கணபதி சக்தி நகரில் வசிக்கும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர்.

அங்கு இருந்த எஸ்.ஆர்.சேகரிடம், சென்னை தலைமை அலுவலகத்துக்கு 21-ம் தேதி (நேற்று) வந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர்.ஆனால், 30-ம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக போலீஸாரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில், டிஎஸ்பி சசிதரன் தலைமையில் சென்னை மற்றும் கோவை சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை 9 மணிக்கு எஸ்.ஆர்.சேகர் வீட்டுக்கு திடீரெனசென்றனர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை செய்த பிறகு புறப்பட்டுச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.ஆர்.சேகர்கூறியதாவது: நாங்கள் விசாரணையைக் கண்டு ஓடமாட்டோம். எனவே, நான் போலீஸாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். திமுக அரசு பாஜகவை களங்கப்படுத்த, அவமானப்படுத்த தொடர்பு இல்லாத விவகாரத்தில் பாஜக அமைப்புச் செயலாளர் மீதும், பொருளாளராகிய என் மீதும் விசாரணை நடத்தும்படி போலீஸாரை தூண்டி விடுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இவர்களது தரப்பில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு வந்த வழக்கறிஞர்கள், வேறொரு நாளில் கட்டாயம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என தெரிவித்துச் சென்றனர்.

கேசவவிநாயகம் மற்றும் மற்றொரு பாஜக பிரமுகர் முரளிஆகியோரிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE