சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.பெரும்பாலும் ஓய்வூதியர்கள், முதியோர் முதலீடு செய்துள்ள தாகக் கூறப்படுகிறது. முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டிதருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்பகொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை, பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தைபெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் 2 இயக்குநர்கள் கைது: இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம், ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் பண்ட் லிமிடெட்' நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார். மேலும் இந்த வழக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக் கோட்டையிலும், மகிமைநாதன் சென்னையிலும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தேவநாதன் உட்பட மூவரும் நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில்,நிதி மோசடியில் தான் ஈடுபடவில்லை என்றும், அரசியல் ரீதியாகபழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், வயது முதிர்வு மற்றும்முதுகு தண்டு வட பிரச்சினை காரணங்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், அதிகஅளவில் நிதி மோசடி உள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, கைதான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆக.28-க்கு தள்ளி வைத்துள்ளார்.