சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

By KU BUREAU

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி மேற்கொள்ள பாஜகவுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசியக்கொடியுடன் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை காவல்துறை நிராகரித்துள்ளதாகக் கூறி கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல்தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்ததில் எந்த அரசியல் காரணமும் இல்லை. தேசியக்கொடியின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். தேசியக்கொடி விதிகளின்படி, தேசியக்கொடி தரையில் படவோ, சேதம்ஏற்படவோ கூடாது.

குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களின் வாகனங்களில் மட்டுமே தேசியக்கொடி பறக்க அனுமதிக்க முடியும். வேறு வாகனங்களில் தேசியக்கொடி பறக்க அனுமதி கிடையாது. தேசியக் கொடியுடன் பேரணி செல்ல காங்கிரஸ்கட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. 200 வாகனங்களில் தேசியக்கொடியுடன் பேரணி செல்வோர் முறையாக ஒழுங்கை பின் பற்றுவர் எனக்கூற முடியாது.

மேலும் இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியை ஏந்தி செல்வது என்பது விதிகளுக்கு புறம்பானது. பேரணியில் செல்வோர் தலைகவசம் அணியாமல் மோட்டார் வாகனவிதிகளையும் மீறக்கூடும். அதேநேரம் சுதந்திர தினத்தை வீடுகளின் மேலே கொடியேற்றி, அறப்பணிகள் செய்து கொண்டாடலாம் என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ், வாகனங்களில் தேசியக் கொடியை கொண்டு செல்ல எந்த விதிகளும் தடை செய்யவில்லை. பேரணியின்போது இருசக்கர வாகனங்களின் பின்னால்அமர்ந்து பயணிப்பவர் தான் தேசியக்கொடியை ஏந்தி செல்வார்.எந்த கோஷமும் எழுப்பப்பட மாட்டாது. அதேபோல தேசியக் கொடிக்கு எந்தவிதமான அவமதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வோம்.

தேசியக்கொடியை ஏந்தி செல்வது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை. தமிழகத்தில் சைக்கிள் மற்றும் இருசக்கரவாகன பேரணிக்கு மட்டுமின்றி தேசியக்கொடியுடன் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட் டுள்ளது என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், சுதந்திரப் போராட்டத்துக்காக தேசியக் கொடியேந்தி உயிர்த்தியாகம் செய்த திருப்பூர் குமரன் வாழ்ந்த நாட்டில் தான் நாமும் வசிக்கிறோம். நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனபிறகும் தேசியக்கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது.

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த வாகன பேரணிக்கு அனுமதிமறுப்பதற்கு எந்த காரணமும் கிடையாது. எனவே தேசியக்கொடியுடன் பாஜக வாகன பேரணி மேற்கொள்ள போலீஸார் நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டும்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியுடன் இருசக்கர வாகனங்களிலோ, சைக்கிளிலோ அல்லது நடந்தோ பேரணி செல்வதை யாரும் தடுக்கக்கூடாது. தேசியக்கொடியை அதற்கான மரியாதையுடன், கண்ணியமாக கொண்டு செல்ல வேண்டும். எந்தவொரு அவமரியாதையும் செய்யக்கூடாது.

பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. பேரணியில் பங்கேற்பவர்களின் விவரம், வழித்தடம் போன்ற விவரங்களை பேரணி ஏற்பாட்டாளர்கள் போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்துக்கு மட்டுமே பொருந்தும். கட்சிக்கொடியேந்தி செல்லக்கூடாது என நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலை வரவேற்பு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, தமிழக பாஜக சார்பாக மனமார வரவேற்கிறோம். சென்னை உயர்நீதிமன்ற அறிவுரையின்படி, தமிழகம் முழுவதும் ஆக.15-ம் தேதி (இன்று) தமிழக பாஜக சார்பாக,தேசியக்கொடி ஏந்தி வாகனப் பேரணி நடைபெறும். பாஜக சகோதர சகோதரிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE