ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

By KU BUREAU

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை சிவகாசியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் நேற்று காலைதொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான சல்பேட் வேதிப்பொருளை வேனில்இருந்து, மருந்துப் பொருட்கள் இருப்பு வைக்கும் அறையில் இறக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட உராய்வால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு, வேதிப்பொருட்கள் இருப்பு வைத்திருந்த அறை முற்றிலும் இடிந்துதரைமட்டமானதுடன், வேதிப்பொருள் ஏற்றி வந்த வாகனமும் தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் நாகபாளையத்தைச் சேர்ந்த புள்ளைகுட்டி(55), குன்னூரைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் (38) ஆகியோர் உடல் சிதறிஅந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டிடம் வெடித்துச் சிதறி செங்கல் விழுந்ததில் போஸ் (35), மணிகண்டன் (31) ஆகிய இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

புள்ளைகுட்டி, கார்த்தீஸ்வரன்

விபத்து குறித்து மல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, பட்டாசு ஆலை ஃபோர்மேன் பாலமுருகனை கைது செய்தனர்.

முதல்வர் நிவாரணம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில்உயிரிழந்த தொழிலாளர்கள் புள்ளைகுட்டி, கார்த்தீஸ்வரன்ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், காயமடைந்த போஸ், மணிகண்டன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE