ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்பு

By KU BUREAU

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, கே.வீ.தங்கபாலு, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் உட்படபலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ராஜீவ் நினைவிடத்தில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியையும் காங்கிரஸ் கட்சியினர் எடுத்துக் கொண்டனர். மேலும் காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜீவ் காந்தி நினைவாக ரத்த தானம் செய்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு செல்வப் பெருந்தகை உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட 9 காவலர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று அங்கு நடந்த நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி. தேவாரம் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE