பாஜக பேரணிக்கு நிபந்தனைகளுடன் ஐகோர்ட் அனுமதி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இரு சக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவை காவல் துறை நிராகரித்துள்ளதாகக் கூறி கோவை மாவட்ட பாஜக செயலாளர் கிருஷ்ண பிரசாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், ‘நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனபிறகும் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என்று என கருத்து தெரிவித்ததுடன், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள தமிழக பாஜகவுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனங்களிலோ, சைக்கிளிலோ அல்லது நடந்தோ பேரணி செல்வதை யாரும் தடுக்கக் கூடாது. தேசியக் கொடியை அதற்கான மரியாதையுடன், கண்ணியமாக கொண்டு செல்ல வேண்டும். எந்தவொரு அவமரியாதையும் செய்யக் கூடாது. பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பேரணியில் பங்கேற்பவர்களின் விவரம், வழித்தடம் போன்ற விவரங்களை பேரணி ஏற்பாட்டாளர்கள் போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்துக்கு மட்டுமே பொருந்தும். கட்சிக் கொடியேந்தி செல்லக் கூடாது என நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள் விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்: ‘மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும். ஒவ்வொரு ஆண்டும் பாடப் புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
» மேற்கு மண்டல ஐஜி, கோவை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
» போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த தமிழக சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் கைது @ புதுச்சேரி
எனவே, அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே, தமிழக மக்களின் தினசரி வாழ்வில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாடப் புத்தகங்களின் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது: ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தின்போது காவல் துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்படும். 3 பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த முறை வீர, தீர செயலுக்கான விருது பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. வன்னியபெருமாள், அபின் தினேஷ் மோதக் ஆகிய இருவருக்கும் சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திறம்பட சேவையாற்றிய பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிபிசிஐடி ஐஜி-யான அன்பு உள்பட தமிழகத்தில் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வலியுறுத்தி தீர்மானம்: புதுச்சேரி மாநில அந்தஸ்து தேவை என மத்திய அரசை வலியுறுத்தும் தனிநபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக புதன்கிழமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்கள் சங்கம்: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்ட கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி கோரி மருத்துவர்கள் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், FORDA சங்க பிரதிநிதிகள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக FORDA சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஒரு குழுவை அமைக்க சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மனிதகுலத்திற்கு சிறப்பாகச் சேவை செய்வதே எங்களின் இறுதி இலக்கு. மருத்துவர்கள் தங்களை பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். எனவே, வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் கருத்து: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிகளவில் பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கு, டெல்லியில் நடந்த போராட்டம் தான் காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் மீனவர்கள் நால்வர் மீது தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் புதன்கிழமை ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவநாதனை தொடர்ந்து மேலும் 2 பேர் கைது: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன இயக்குநர்கள் குணசீலன் புதுக்கோட்டையிலும், மகிமை நாதன் சென்னையிலும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத் துறைக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம்: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு மேலும் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது!’ -‘உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் ஏன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்’ என்று என்று பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், ‘நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது சரி. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் வரும், போகும். அது வேறு. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், வருவார்கள் போவார்கள், அது வேறு. மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது’ என்று அவர் பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, “மாநில முதல்வராக இனி தலித் ஒருவர் வர முடியாத சூழ்நிலை உள்ளதாக திருமாவளவன் கூறியதை நானும் ஏற்கிறேன். அதேசமயம் திமுக அரசு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறியதை நான் எதிர்க்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.