கோவை: புதிய மேற்கு மண்டல ஐஜி மற்றும் புதிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய, கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு மண்டல காவல்துறையின் ஐஜியாக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி, சென்னை செயலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், சென்னையில் டிஜிபி அலுவலகத்தில், பொதுப் பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்த டி.செந்தில்குமார், மேற்கு மண்டல ஐஜியாக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள, மேற்கு மண்டல அலுவலகத்தில், ஐஜியாக செந்தில்குமார் இன்று (ஆக.14) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார் கூறியதாவது: "கோவை மேற்கு மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். ரவுடிகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும். காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களிடம், காவலர்கள் அனுசரணையாக நடந்து கொள்ள உத்தரவிடப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாவிட்டாலும், மாற்று நடவடிக்கை குறித்து உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்.
ஆன்லைன் மோசடிகளை தடுக்கவும், விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்படும்" என்று ஐஜி செந்தில்குமார் கூறினார். புதிய ஐஜியாக பொறுப்பேற்ற செந்தில்குமாருக்கு, மேற்கு மண்டல காவல்துறை உயரதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
காவல் கண்காணிப்பாளர்: "அதேபோல், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பத்ரி நாராயணன், கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பியாக பணியிடம் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள,மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஆக.14) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது: போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். சட்டம் ஒழங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்" என்றார்.