சென்னை: கண்பார்வை குறையுடைய பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் ஆக.20 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:"தென்சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பார்வை குறைபாடுடைய பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பேருந்து பயண அட்டை வழங்க ஆக.20 முதல் 23-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி, தேனாம்பேட்டை மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் (டிஎம்எஸ்), கே.கே.நகர் மாநில வள மற்றும் பயிற்சி மையம், மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளான அடையாறு புனித லூயிஸ் பள்ளி, தேனாம்பேட்டை சிறுமலர் பள்ளி, திருவொற்றியூர் அன்பாலயா பள்ளி, அண்ணா நகர் மேரி கிளப் வாலா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள், மீனம்பாக்கம் முக்தி செயற்கை அவயவங்கள் நிலையம், குன்றத்தூர் சேக்கிழார் ஆண்கள் பள்ளி, பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
இங்கு காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைப்பேசி, யுடிஐடி அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து பதிவு செய்து பயன் பெறலாம்" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
» குன்னூரில் கடும் பனிப்பொழிவு: வழி தெரியாமல் பள்ளத்தில் கவிழ்ந்த கார்
» தாய் வழியிலும் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு